திங்கள், 11 ஏப்ரல், 2011

உன்னால் முடியும் தம்பி !!!


ஏனோ தானோ வென்று கண்டதையும் எழுதிக் கொண்டிருந்த எனக்கு ஏனோ இவரைப் பற்றி எழுத வேண்டுமென்று தோனிற்று. நேர்மையாக வாழ்வது கடினம், அதிலும் ஊழல் யுகத்தில் நேர்மையாக வாழ்வது கடினத்திலும் கடினம் என்று தான் தோன்றுகிறது. பதிவு கொஞ்சம் நீளம் தான். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். எனக்கு இவரைப் பற்றி படித்தவுடன் "உன்னால் முடியும் தம்பி" படம் தான் ஞாபகத்திற்கு வந்தது.




ஆரம்ப கால வாழ்க்கை

அன்னா அசாரே, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அகமத்நகர் எனும் நகரத்திற்கு அருகிலுள்ள பிங்கார் என்னும் சிற்றூரில் பிறந்தார்.  இவருடைய தந்தை பாபுராவ் அசாரே ஆயுர்வேத ஆசிரம பார்மஸி ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். அன்னா பிறந்த பொழுது தான் பிங்காரில் பணியிலமர்த்தப் பட்டார். இவரின் தாத்தா 1945 ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனாலும் அன்னாவின் தந்தை தொடர்ந்து பிங்காரிலேயே வசித்து வந்தார். 1952 ம் ஆண்டு அன்னாவின் தந்தை தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த கிராமமான ராலேகன் சித்திக்கு வந்தார். அப்பொழுது அன்னாவின் உடன் பிறந்தோர் 6 பேர் இருந்தனர். மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர் அன்னாவின் குடும்பத்தார். அப்பொழுது அன்னாவின் குழந்தையில்லா அத்தை தான் அன்னாவை பாம்பேவிற்கு அழைத்து சென்று அங்கு அவரை படிக்க வைத்தார். அன்னா ஏழரவது வரை படித்தார். பிறகு குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தாதரில் பூக்களை விற்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் குடும்பத்தை காப்பாற்றவும் உறுதுணையாகவும் இருந்தார். கொஞ்ச காலத்திற்கு பிறகு கிடைத்த அனுபவத்தினைக் கொண்டு தனியாக பூக்கடையொன்றினை தொடங்கினார். தன்னுடைய இரு சகோதரர்களையும் பாம்பேவிற்கு அழைத்துக் கொண்டார்.  சீராக கொஞ்சம் கொஞ்சமாக அன்னாவின் வருமானம் மாதம் 800 ரூபாயாக உயர்ந்தது. அந்த காலங்களில் அது ஒரு நல்ல வருமானம் தான்.


இந்திய ராணுவத்தில் அன்னா

அன்னா அசாரே இந்திய ராணுவத்தில் ஒரு டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சுவாமி விவேகானந்தா, மகாத்மா காந்தி மற்றும் ஆச்சாரிய வினோபா பாவே ஆகியோருடைய புத்தகங்களையெல்லாம் வாசித்தார். அதன் மூலமாகவே அவர் ஈர்க்கப் பட்டு, 1965 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது தான் ஒரு சமூக சேவகரானார். அந்த போரில் இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்தவர்களில் தப்பித்தவர்களில் இவரும் ஒருவரே. 1970ல் ஒரு டிரக் விபத்திலிருந்து தப்பித்தவர். பிறகு இந்திய 1975 ம் ஆண்டு விருப்ப ஓய்வினை பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரானா ராலேகன் சித்திக்கு வந்தார்.

இவர் தருன் மண்டல் என்றொரு இளைஞர் இயக்கத்தினை ஆரம்பித்தார்.

முதலில் சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென தீர்மானித்தார். குடியினால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்பதை அறிந்து கொண்டார். இந்த குடிப் பழக்கம் என்ற சாபக்கேடு இருந்தால் நிச்சயமாக கிராமம் முன்னேறாது என்று நம்பினார். அதனால் தான் முதல் பணியாக குடியை வேறறுக்க திட்டமிட்டார். (இது ஒன்னும் பாமக ராமாதாஸ் அய்யா அப்ப பிணாத்துவாரே அதை நினைச்சிக்காதீங்க...!)

அவர் தனது இளைஞர் இயக்கத்துடன் சேர்ந்து ஊர் மக்களை ஒரு கோயிலில் ஒன்று திரட்டி கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றினார்.  (இது கருணாநிதி அய்யா இயற்றுற செயற்குழு தீர்மானம் இல்லீங்கோவ்.......!)

அதன்படி ஊர் மக்கள் எல்லோரும ஒன்று சேர்ந்து சாரய ஊரல்களை அழித்தனர். ஊருக்குள்ள குடிக்க கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடும் விதிக்கப் பட்டது. (என்னைக்கும் தமிழ் நாட்டுல பூரண மதுவிலக்கு அமுலாகாதுங்கப்பா.....15000 கோடி ரூபாய் வருமானம் அரசாங்கம் விடுமா என்ன? அதனால தமிழ் 'குடி' மகன்கள் பயப்பட வேண்டாம்)
பிறகு ஒரு கட்டத்தில் தானாக முன் வந்து 30 சாரய உற்பத்தி செய்றவங்க தானாக முன்வந்து தன்னுடைய ஊரல் ஆலைகளை மூடிவிட்டார்கள். ஏனென்றால் இளைஞர் பட்டாளம் அவர்களுடைய சாராய ஊரல்களை அடித்து நொறுக்கிய போது அவர்களால் புகார் கூட கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்யும் தொழில் ஒன்றும் நேர்மையாக நடத்தும் அல்லவே.

இப்படியிருந்தும் ஜனங்க அவ்வளவு சீக்கிரம் திருந்திடுமா என்ன? அதே தான் அந்த ஊர்ல சில பேரு இந்த கட்டுப்பாட்டை மீறி பக்கத்து ஊரில் இருந்து சாராயத்தினை வாங்கி வந்து குடித்துக் கொண்டு தானிருந்தனர். இதனால் அசாரே என்ன செய்தார் தெரியுமா? குடிப்பவர்களுக்கு மூன்று முறை எச்சரிகை செய்யப் படும். அதன் பிறகு உடல் ரீதியான தண்டனை வழங்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் படி குடித்த நிலையில் பிடிப்பட்ட 12 பேரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து வெளு வெளுவென வெளுத்தனர் அந்த இளைஞர் இயக்கத்தினர்.

அப்போது அன்னா அசாரே சொன்னார்.

"ஒரு குழந்தைக்கு அம்மா ஏன் கசப்பான மருந்தை கொடுக்கிறார் என்று அந்த அம்மாவிற்கு தான் தெரியும், குழந்தைக்கு கசப்பான மருந்தைக் கொடுத்தால் தான் நோய் குணமாகுமென்றால் குழந்தைக்கு பிடிக்காவிட்டாலும் அதைக் கொடுத்து தானே ஆக வேண்டும். ஏனென்றால் அந்த குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு அந்த அம்மாவுடையது தானே"

அதுபோல தான் மது அருந்திய இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையும், இது இவர்களுடைய குடும்பம் அழியாமலிருப்பதற்காக தான்.

அன்னா மகாராஷ்டிரா மாநில அரசிற்குஒரு கோரிக்கை வைத்தார். அதன்படி ஒரு ஊரிலுள்ள 25­% பெண்கள் ஆதரவளித்தால் அந்த ஊரில் மது விலக்கு கொண்டு வரப்பட வேண்டு மென்பமதே. அதன் படி ஜூலை 2009 ல் மாநில அரசு பாம்பே தடுப்பு சட்டம், 1949-ல் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி 25% சதவீத பெண்கள் மது விலக்கிற்கு ஆதரவாக மாநில வரித்துறைக்கு எழுத்துப்பூர்வமான மனுக்களை அளித்தால், ரகசிய வாக்கெடுப்பின் படி அந்த ஊரில் மதுவிலக்கு அமுல் படுத்தப்படும். அதே போல நடவடிக்கை வார்டு மற்றும் முனிசிபல் அளவிலும் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன் பிறகு மேலும் ஒரு திருத்தத்தை அரசு கொண்டு வந்தது. அதன்படி புதிதாக மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் போது கிராம சபையின் ஒப்புதலை கண்டிப்பாக பெறவேண்டும். இதனை அடிப்படையாக கொண்டு பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக அரசு வழக்குகளை பதிவு செய்தது. இதனால் அசாரே மீண்டும் இப்பிரச்சினையை ஆகஸ்டு 2009 கையிலெடுத்தார். எனவே மாநில அரசு இப்பிரச்சினையை கைவிட்டு அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதோடு மதுவிலக்கினையும் அமுல் படுத்தியது. மது விலக்கோடு புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளையும் தடைசெய்தது.

இதனைக் கொண்டாடும் விதமாக அந்த இளைஞர் இயக்கம் ஹோலிப் பண்டிகையை கொண்டாடியது. ஹோலி என்பது தீயவற்றைகளை எரிப்பது என்று பொருளாகும். ஆகையால் அந்த ஊரிலுள்ள எல்லா புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளையும் இளைஞர்கள் கொண்டு வந்து ஹோலி நெருப்பினைக் கொளுத்தி தீயிலிட்டு அழித்தனர். அன்றிலிருந்து அந்த ஊரில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளை எந்த கடையிலும் விற்பதில்லை. (ஆனால் பாமக அன்புமணி சின்ன அய்யா புகையிலை, சிகரெட் மற்றும் பீடி விளம்பரங்களை தடைசெய்ததோடு பின் பக்கமா காசு வாங்கிட்டாருன்னு ஒரு பேச்சு....)


பனி பரவதா மண்டல் என்றொரு இயக்கத்தினையும் ஆரம்பித்து அதன் மூலம் நீர் விநியோக ஒன்றியத்தினை ஆரம்பித்தார்.

விவசாயத்திற்கு மிக முக்கியம் மேம்படுத்தப் பட்ட பாசன வசதியாகும் என்பதை அன்னா உணரலானார். ராலேகன் கிராமம் சின்ன மலைகளையுடையதாகும். எனவே அந்த பகுதியில் சின்ன சின்ன செக் டேம்களை கட்ட எத்தனித்தார். அதற்காக அவர் அந்த ஊரிலுள்ள தன்னார்வ தொழிலாளர்களை பயன்படுத்தி முதல் செக் டேமை கட்டினார். ஆனால் அந்த செக் டேம் லீக் ஆக ஆரம்பித்தது. பிறகு அரசாங்கமே அவருக்கு செக் டேமை கட்ட நிதியுதவி செய்தது.

அதே போன்று அந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் மண்ணரிப்பை தடுக்க எத்தனித்தார். அதற்காக அவர் 3,00,000 மரக்கன்றுகளை அந்த ஊரை சுற்றிலும் மலையெங்கும் நட்டார். அதற்கு அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆம் அவரின் அந்த செக் டேம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இப்போது அந்த பகுதியில் நல்ல நீர்வரத்தும நீராதாரமும் கிடைத்துள்ளது. சொட்டு நீர் பாசனத்தை வெற்றிக் கரகமாக செயல்படுத்தி அதன் மூலம் பப்பாளி, எலுமிச்சை, மிளகாய் பயிரிடப்பட்டு 80 ஏக்கர் அளவில் விவசாயத்தை வெற்றியடைய செய்தார். பணப்பயிரான கரும்பினை பயிரிட தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அது அதிக நீரை எடுத்துக் கொள்ளும் என்பதால். அதற்கு பதிலாக பயிறு வகைகள் மற்றம் எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு வெற்றிக் கண்டனர். நல்ல விளைச்சலை கண்ட விவசாயிகளால் அந்த கிராமமே ஒளிர ஆரம்பித்தது. 1975லிருந்து அவர் இது வரை 70 கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு உதவியுள்ளார்.

அதேபோல கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை பெருமளவு அதிகரிக்க செய்தார். கலப்பின மாடுகளை கால்நடை மருத்துவர்களின் உதவியோடு உருவாக்கி அதிக பால் சுரக்கும்படி செய்வித்தார்.


Sant Yadav Baba Shikshan Prasarak Mandal டிரஸ்ட்டின் மூலமாக 4,00,000 ரூபாய் அரசிடமிருந்து National Rural Education Programme (NREP) திட்டதின் மூலமாக பள்ளிக் கட்டிடம் மற்றும் புதிய ஹாஸ்டல் ஆகியவைகளை இரண்டு மாதத்தில் கட்டி 200 மாணவர்களைப் படிக்க வழிவகை செய்தார்.

தீண்டாமை ஒழிப்பு, கலப்பு திருமணம் மற்றும் கிராம சபை சட்டத் திருத்தம் ஆகியவைகளை மேற்கொண்டார்.

ஊழல் எதிர்ப்பு போராட்டம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் ஆகியவைகளை ஏற்படுத்தி மகாரஷ்டிரா மாநில அரசிற்கு சவாலாக இருந்தார்.


லோக்பால் சட்டமாக்கலுக்கான போராட்டம்

அண்ணா அசாரேயின் 2ம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் 2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடினார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரசுரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்தினார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.


அன்னா அசாரேவின் குரல்

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களை தன்பின்னால் அணிவகுக்கச்செய்த காந்தியவாதி அன்னா ஹசாரே, தேர்தலில் நின்றால் ஜெயிப்பாரா?

'ம்ஹூம்... டெபாஸிட் கூட கிடைக்காது' என்கிறார் ஹஸாரே.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அன்னா ஹஸாரே. அப்போது அரசியலில் ஈடுபட விருப்பமா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளிக்கையில், "எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பிரதமராகும் விருப்பமும் இல்லை.

நான் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் தொகை கூட கிடைக்காது. ஏனென்றால் எனக்கு பணபலம் இல்லை. வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை 100 ரூபாய் பணத்துக்காகவும், மது பாட்டிலுக்காகவும் விற்கும் நிலை உள்ளது. இன்றைக்கு ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் ரூ 6 முதல் 7 கோடி வரை தேவை," என்றார்.

நேர்மையான எம்.பி.க்கள் உங்களை பிரதமராக தேர்ந்து எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டபோது, "நான் அரசியலில் நுழைந்து பிரதமராகும் நிலை ஏற்பட்டால், நான் தற்போது செய்து கொண்டு இருப்பதை, அரசின் அங்கம் என்ற முறையில் செய்ய முடியாது. அரசியலில் இறங்குவது குறித்து ஒருபோதும் நான் நினைத்தது இல்லை," என்று அவர் பதில் அளித்தார்.

மகாத்மா காந்தி அல்லது ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, "மகாத்மா செய்தது மிகப் பெரிய சாதனை. நான் அவரைப் பின்பற்ற முயல்கிறேன். அவரோடு யாரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. மகாத்மா பெரும் அறிவாளி, மெத்தப் படித்தவர். நான் பெரிதாக படிக்கவுமில்லை. தேசத்தின் தந்தையான அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்", என்றார்.

மொத்தத்தில் இவர் ஒரு உன்னால் முடியும் தம்பி !!! ஆம் சில எளிய செயல்களை ஒழுங்காக செய்தால் பின்னாளில் அதுவே வியத்தகு சாதனைகளாக மாறிவிடும்.

1 கருத்து:

நீங்க ஏனோ தானோன்னு கருத்தை சொல்லுங்க....ஆனா பதில் ஏனோ தானோன்னு இருக்காதுங்க....
உங்கள் பொன்னான கருத்துக்களை எப்பொழுதும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...