ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

'கோ' - திரைப் பார்வை

 குமார் ஜெயராமன் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா (ராதா மகள்), பியா, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ் நடிப்பில் வெளிவந்திருக்கிற மற்றொரு வெற்றிப்படம் தான் இந்த கோ.

நான் கே.வி. ஆனந்த் படம் பார்க்க போறேன் என்றவுடன், கண்களுக்கு விருந்து இருக்கும் என்று தான் நம்பி போனேன். என்னுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் வீண் போகவில்லை. படத்தின் திரைக்கதைக்கும், அதை படமாக்கியிருக்கிற விதத்திற்கும் முதலில் என் சார்பாக கே.வி. ஆனந்த் சாருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து விடுகிறேன்.

டைட்டில் போடும் போதே கே.வி. ஆனந்த்தோட போட்டோகிராபி இன்ட்ரெஸ்ட்டை நம்மால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. டைட்டில்லேயே எல்லா அரிய புகைப்படங்களையும் சிலைட் ஷோவாக போட்டு பேர் போட்டு இருப்பார். டைட்டில்லே இருந்தே பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் உருவாக்கி அங்கே இருந்து நம்மளை படம் பார்க்க உட்கார வைத்திருக்கிறார்.

'கோ' படம் ஒரு 'அரசியல் திரில்லர்' படம். ஒரு வங்கிக் கொள்ளையிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. நுட்பான காட்சியமைப்புகள் மற்றும் கொள்ளையடிக்கும் விதம் இதிலிருந்தே படத்திற்கு ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. தின அஞ்சல் புகைப்படக்காரரான 'ஜீவா' கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கும் கும்பலை விரட்டி விரட்டி போட்டோ எடுத்து தள்ளுகிறார். அந்த போட்டாக்களை போலிசிடம் கொடுத்து, போலிசும் அந்த கொள்ளை கும்பலை உடனடியாக பிடித்துவிடுகிறது. (இதெல்லாம் சினிமாவில மட்டும் தான் சாத்தியம்!)  இங்கிருந்து படம் மெல்ல அரசியலை நோக்கி நகர்ந்து தேர்தலை மையமாக வைத்து யார் அடுத்த 'கோ'(அரசன்) யார் என்பதை சொல்வது தான் இந்த 'கோ'.

'ஜீவா' வழக்கமான தமிழ் ஹீரோ மாதிரி அரசியல் வியாதிகளுக்கு எதிராக சவால் விட்டு பஞ்ச் டயலாக் பேசி அவங்களை எல்லாம் அழிப்பது போல் இல்லாமல், அதிக வசனம் பேசாமல், தன் நடிப்பின் மூலமே மற்றவர்களை பேச வைத்திருக்கிறார்.  அஜ்மல்லுடன் ஜீவா அடிக்கடி கண்களாலேயே பேசிக் கொள்வது நல்ல காட்சியமைப்புகள்.  ஜீவாவோட எல்லா திறமைகளையும் ஓரளவிற்கு அங்கங்க இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். ஜீவாவிற்கு ஏற்ற கதாபாத்திரம் தான். ரொம்ப சிறப்பாக எல்லா பிரேமிலும் செய்திருக்கிறார். ஜீவாவை நல்லா அழகாகவே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இயக்குநர் விருப்படி ஒழுங்காக நடிச்சாலே படம் பாதி வெற்றியடைந்துவிடும். அந்த சூட்சமம் புரியாம 'தமன்னா' தான் வேண்டும்ன்னு அடம் பிடிச்சி 'பொம்பளை போதையில' ஒரு நல்ல படத்தை இழந்துட்டாரு 'சிம்பு'. சிம்புக்கு வடை போச்சு. இருந்தாலும் இது சிம்புக்கு ரொம்ப ஓவர் தான்.


கார்த்திகாவுக்கு நல்ல அறிமுக காட்சி தான். ஜீவாவை திருடன் என்று தவறாக நினைத்து அந்த கொள்ளை கும்பல் துரத்திக் கொண்டிருக்கும் போது ஜீவாவை கீழே தள்ளி விட்டு பிடித்து கொடுக்கும் அந்த காட்சி. படம் முழுக்க ஓரளவுக்கு வரும் கதாபாத்திரமாகத் தான் இவருக்கு முதல் படம் அமைந்திருக்கு. நல்ல கண்கள், நல்ல உயரம் (இதே மைனஸ்சும் கூட) அழகாகத் தான் இருக்காங்க. இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் ராதாவைத் தான் பிடித்திருக்கு போல. தியேட்டர்களில் ராதாவை பாராட்டுவது காதில் விழத்தான் செய்தது. பாடல் காட்சிகளில் நன்றாக காட்சியளிக்கிறார். கண்களாலேயே பேசும் இடங்கள் எல்லாம் நடிப்பு மிளிர்கிறது. பார்க்கலாம் போக போகத் தான் தெரியும் இவரு அம்மா அளவிற்கு சாதிப்பரான்னு?


துருத்துரு பெண்ணாக ஜீவாவின் நண்பியாக 'பியா' வருகிறார். ஜீவா, பியா, கார்த்திகா சேர்ந்து அடிக்கும் கும்மி ரசிக்கும்படியாக உள்ளது. அப்பாவியான பியா இறந்து போகும் போது நமக்குள்ளும் வருத்தம் ஏற்படுகிறது. பியா நல்ல தேர்வு.

ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமிலும் 'சபாஷ்' சொல்ல வைக்கிறது. பாடல் காட்சிகளாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும் எல்லாமே அருமை ரகம். சொல்ல போனால் நான் பல ஆங்கிலப் படங்களில் பார்த்து ரசித்த தரம், இந்த 'கோ' படத்தின் ஒளிப்பதிவில் உள்ளது. துப்பாக்கி தோட்டா தெரிக்கும் காட்சிகள், ஆரம்பத்தில் வரும் துரத்தல் காட்சிகள், குண்டுவெடிப்பு காட்சிகள், வென்பனியே என வரும் சீனாவில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள், 'என்னமோ ஏதோ' பாடலின் ஒளிப்பதிவு கண்களுக்கு மிகச் சிறந்த விருந்தாகவே உள்ளது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்டுக்கு இன்னொரு ஸ்பெஷல் பூங்கொத்து.


மதன் கார்க்கியின் பாடல் வரிகள் உள்ளத்தை 'என்னமோ ஏதோ' செய்யத்தான் செய்கிறது. ஹாரிஸின் இசையும் படத்திற்கு ஒரு பலம் என்று தான் சொல்ல வேண்டும். பாடல்களில் என்னமோ ஏதோ நல்ல அருமையான மனதை வருடும் இசை. மற்றவை 'அமளி துமளி', 'வென்பனி' ஆகியவை ஹாரிஸின் வழக்கமான ரகங்களாகும். பின்னணி இசையில் தன் முன் படங்களை ஞாபகப் படுத்தினாலும் தன் முந்தைய படங்களில் இருந்த இரைச்சலான இசையை இதில் தராதது ஹாரிசுக்கு பிளஸ்.

இந்த படத்திற்கு 'அஜ்மலின் கேரக்டர்' தான் படத்திற்கு உயிரோட்டம் ஆகும். நாளைய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்கிற சாரம்சத்தை வைத்து இன்றைய ஊழல் அரசியல் வியாதிகளை எதிர்த்து குரல் கொடுக்கும் இளைஞனாக அஜ்மல். இளைஞர்கள் நினைத்தால் எந்த அரசியல் சக்தியையும் வீழ்த்த முடியும் என்பதை நன்றாக காட்டியிருக்கிறார்கள். தீப்பிடிச்ச குடிசைகளை அணைச்சி குழந்தையை காப்பாத்துறது, ஆளும்கட்சி பேச்சாளருக்கு நெஞ்சுவலி வந்த சமயத்தில் கட்சி பேதமில்லாமல் அவருக்கு முதலுதவி செய்து அவரது நண்பர் காப்பாத்துறது, சிறகுகள் கட்சி தலைவரை அடிச்சி உதைச்சி பிரச்சாரம் பண்ணவிடமா அடிவாங்குகிற காட்சிகள், பாம் வெடித்தபிறகு தன் சிறகு நண்பர்களை தேடுதல் போன்ற காட்சிகள் எல்லாம் நல்லா ரீச் ஆகும் படி செய்திருக்கிறார் அஜ்மல். முதல்வராக அமர்ந்தது முதல் க்ளைமாக்ஸ் காட்சிகள் வரை வித்தியாசமான 'வசந்தனா' வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜ்மல்.


தமிழக முதல்வராக பிரகாஷ்ராஜின் நடிப்பு பிரமாதம். அவர் வரும் காட்சிகள் அவருக்கே உரிய பாணியில் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கார்த்திகா, ஜீவாவை கார்ல ஏறச் சொல்லி பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் கார்த்திகாவை வறுத்தெடுப்பதும், பத்திரிக்கையில் 'வசந்தன் நடந்துதான் வறாரு' எழுதியிருக்கிற 'நான் நடந்தா என்னாகும்ன்னு பார்க்கிறீயா' என்று தீடீரென்று ரோட்டில் இறங்கி நடப்பதும், செருப்பால அடிக்கற காட்சிகள் ஆகியவை நல்ல அரசியல் நெடி,  'அரசியல்ல எங்க முகத்தை காண்பிக்கனும், எங்க முதுகைக் காண்பிக்கணும்' என்ற வசனம் பேசும் போது 'நிஜ' முதல்வராக தெரியாரு.

'கோட்டா சீனிவாசராவ்' அருமையான அளவான நடிப்பு. கதாபாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். இன்றைய அரசியல் வியாதிகள் மறைமுகமா செய்கிற அத்தனை காட்சிகளையும் நிஜமாக பிரதிபலித்திருக்கிறார் இந்த கோட்டா சீனிவாச ராவ். குழந்தை தூக்கி பேரை வைச்சிட்டு, தூக்கின கையை டெட்டால் போட்டு கழுவுறது, சின்ன பெண்ணை கல்யாணம் பண்றதா நியூஸ் போட்டா கார்த்திகாவை மிரட்டறது, தேர்தல் தோல்வியடைந்த பிறகு, எந்த பட்டனை அமுக்கினாலும் ஒரே கட்சிக்கே ஓட்டு விழற மாதிரி மின்னணு இயந்திரங்களை செட் பண்ணியிருக்காங்கன்னு பேட்டி கொடுக்கிறது, ஆளும் கட்சிக்காரன் சாவுக்கு போய் பணம் கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது, பாம் வெடிச்ச இடத்தை பார்வையிட்ட பிறகு, 'பாம் வைச்சது யாருன்னு உங்களுக்கும் தெரியும், பார்த்தீங்களா அவரு வந்தாரா? இதிலெருந்து என்ன தெரியுது' என்று சொல்லும் காட்சிகள் எல்லாம் நல்ல டைமிங்.

காசுக் கொடுத்துவிட்டு குழந்தை மேல சத்தியம் வாங்கிக்கிட்டு வோட்டை மாத்தி போடக் கூடாதுன்னு சொல்லும் போது, காசு வாங்குகிற ஒவ்வொரு வாக்காளனும் தான் வெட்கப்பட வேண்டிய காட்சி.

'தம்மாத்துண்டு பிளாஸ்திரி போட்டுவிட்டுட்டு உண்மையை கறந்துடலாம்ன்னு பார்க்கிறீயா? உன் பத்திரிக்கைக் காரன் புத்தியை காட்டிட்டே இல்ல.. ஆமாம்டா நீங்க செத்த போணத்தைக் கூட எழுப்பி நியூஸ் வாங்கிடுவங்கைய்யான்னு சொல்றது',
உங்களுக்கெல்லாம் அரசியல் வாதிகள் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்ற மாதிரி, உங்க கூட்டத்துக்கு நீங்களும் ஒரு காரணம் சொல்லுவீங்கன்னு சொல்ற இடம்
போஸ் ஜீவா உரையாடலும், அதைத் தொடர்ந்து வருகிற பிளாஷ் பேக் காட்சிகளும் நிறைவான அளவோடு வைத்தமைக்கு நன்றி. 

ஒளிப்பதிவிற்கும் லோகேஷன்களுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கே.வி. ஆனந்த். ஷங்கருடன் பணியாற்றியதாலோ என்னவோ பாடல் காட்சிகளுக்கு இவரும் தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு பாடல்களையும் அருமையான லோகேஷன்களில் படமாக்கியிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. அதைவிட முக்கியம் கொஞ்ச வருடங்களாகவே பாஸ்ட் எடிட்டிங்ன்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல, ஒரு காட்சி ஒரு பிரேமுல தான் வரும் அடுத்த பிரேமுல வேற காட்சின்னு இஷ்டத்துக்கு கட் பண்ணி ஒரு காட்சியை கூட மனசில பதிய விடமாட்டேங்கிறாங்க. "கேட்டா" இப்பத்தைய டிரெண்ட்ன்னு சொல்லிக்கிறாங்க. இத்தனைக்கும் ரொம்ப சிரமப்பட்டு, சூப்பரான லோகேஷன்ல எடுத்திருப்பாங்க இருந்தும் அதை நிறைவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்க மாட்டாங்க. ஆனால் கே.வி. ஆனந்த் அதில்ல கவனம் செலுத்தியிருக்கிறது பாடல் காட்சிகளை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு லோகேஷனும் படம் பார்த்துவிட்டு வந்தபிறகும் கண்களில் நிறைந்து இருக்கும் படி அளவான எடிட்டிங் செய்திருப்பதற்கு ரொம்ப நன்றி. படத்தில அஜ்மல் வர இடத்தில எல்லாம் ஜீவா எப்படி ஆஜாராகுறாரு அப்படிங்கிற கேள்வியை அந்த இடத்திலேயே பத்திரிக்கையாளர் மூலமாக கேட்க வைத்து ரசிகர்கள் வாயையடைத்துவிடுவது, தன்னுடைய முதல் படமான 'அயனை' பியாவை வைத்து கிண்டல் செய்துக் கொள்வது எல்லாம் கே.வி. ஆனந்த்தின் புத்திசாலித்தனமான காட்சிகள். படத்தின் விறுவிறுப்பு கடைசிக் காட்சி வரை குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார். சுபாவின் கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். 'வென்பனியே' பாடல் வரும் இடம் படத்திற்கு துளியும் ஒட்டவில்லை. இருந்தாலும் படமாக்க்யிருக்கும் விதத்தினால் அந்த குறையை பெரிதாக சொல்ல முடியாது.

'கமர்ஸியல்' டைரக்டருக்கான முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.
நமக்கெதுக்கு அரசியல்ன்னு பேசவே ஒதுங்குகிற பலர் இருக்கும் போது, படமாக்க எவ்வளவோ விஷயம் இருந்த போதும் தைரியமாக 'அரசியல் கதையை' சொல்லியிருக்கிற கே.வி. ஆனந்திற்கு இன்னொரு 'சபாஷ்'. 


'கோ' விற்காக உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கலாம்.

2 கருத்துகள்:

  1. கோ விமர்சனம் அருமை...
    திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் விமர்சித்திருக்கிறீர்கள்!

    வாழ்த்துக்கள்!

    கோ படத்தின் Video Songs பார்க்க மற்றும் Download செய்ய :
    http://www.alltamilvideosongs.com/?tag=ko

    பதிலளிநீக்கு

நீங்க ஏனோ தானோன்னு கருத்தை சொல்லுங்க....ஆனா பதில் ஏனோ தானோன்னு இருக்காதுங்க....
உங்கள் பொன்னான கருத்துக்களை எப்பொழுதும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...